வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து 5 ஆண்டு ஆனால் உதவித்தொகை!


வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, 5 ஆண்டுகளுக்கும்
மேல் காத்திருப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
 இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
 வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் தற்போது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இத் திட்டப்படி, கடந்த மாதம் 30-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதோர், எஸ்.எஸ்.எல்.சி., 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பினை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் (30.9.2007 வரை) தொடர்ந்து புதுப்பித்து வருபவர்கள், 2012 அக்டோபர் மாதம் முதல் உதவித்தொகை பெற தகுதி உடையவர்களாவர்.
 மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவு செய்து ஓராண்டு பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும். இத்தொகை பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 50 ஆயிரமாகும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பின்படி தகுதியுள்ள பயனாளிகள் இதர தகுதிக்குள்பட்டு புதிய விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
 பயனாளி தமிழகத்தில் கல்வி முடித்தவராகவும், வேறு எந்தப் பணியிலும் ஈடுபடாதவராகவும் இருக்க வேண்டும்.
 அரசு மற்றும் பிற வகைகளில் எந்தவித நிதி உதவியும் பெறக்கூடாது. பள்ளி, கல்லூரியில் தற்போது படிப்பவராகவும் இருக்கக் கூடாது. இத்தகுதியை உடையவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்வித் தகுதி சான்றுகளுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பம் பெற்று, நவ. 30-ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 100, எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்களுக்கு மாதம் ரூ. 150, 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ. 200, பட்டதாரி, முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 300, மாற்றுத் திறனாளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. வரை பயின்றவருக்கு மாதம் ரூ. 300, பனிரெண்டாம் வகுப்பு வரையிலானவர்களுக்கு ரூ. 375, பட்டதாரி, முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ. 450 உதவித்தொகையாக அந்தந்த காலாண்டின் முடிவில் பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
 ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் ஓராண்டு முடித்திருந்தால் தொடர்ந்து பெற அதற்கான சுய உறுதிமொழி ஆவணத்தை வரும் நவ. 30-ம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
 12 காலாண்டுகள் உதவித் தொகை பெற்று முடித்தவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்கத் தேவையில்லை. ஏற்கெனவே 12 காலாண்டுகள் உதவித்தொகை பெற்று முடித்தவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்கப்ப மாட்டாது.
 உதவித்தொகை பெறுவதால் தங்களுக்கு கிடைக்கப்பெறும் வேலைவாய்ப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.
 இது குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர், 0451-2461498 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கோ நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment