நாளை 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், நாளை (31ம் தேதி), காலை, 9.15 மணிக்கு வெளியாகிறது. அரசின் இணையதளங்களில் மட்டுமே தேர்வு
முடிவுகளை பார்க்க முடியும் என கல்வி துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொது தேர்வு, மார்ச், 27ம் தேதி துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 5,43,152 பேர் மாணவர்கள்; 5,25,686 பேர் மாணவியர் என, மொத்தம், 10 லட்சத்து, 68 ஆயிரத்து, 838 பேர் தேர்வு எழுதினர்.

"தேர்வு முடிவுகள், மே, 31ம் தேதி வெளியிடுப்படும்" என, இம்மாதம் முதல் வாரத்திலேயே தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகளை முழு வீச்சுடன் அரசு தேர்வு துறை செய்து வருகிறது.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், நாளை காலை, 9:15 மணியளவில் வெளியாகிறது. அரசின் இணையதளங்களில் மட்டுமே தேர்வு முடிவுகளை பார்க்க முடியும் என கல்வி துறை அறிவித்துள்ளது. www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in ஆகிய அரசு இணையதளங்களில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

சென்னை மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை, கலெக்டர் அலுவலக தரை தளத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் மையத்திலும், ஐந்தாம் தளத்தில் உள்ள தேசிய தகவல் மையத்திலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில், 57,559 பேர், 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment