+2 மறுகூட்டல் விண்ணப்பத்தை இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

+2 தேர்வு முடிவின் பிறகு, மாணவர்கள் மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் மட்டும் பூர்த்தி செய்யுமாறு
தேர்வுத்துறை மாற்றியுள்ளது. இதனால் மாணவர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். +2 தேர்வு முடிவு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. ஆனால் 8 ஆம் தேதி அரசு தேர்வு இயக்குனரகத்தில் இருந்து பத்திரிகைகளுக்கு அனுப்பிய அந்த செய்தி 9 ஆம் தெதி வெளியானது. அதில் +2 தேர்வு முடிவுக்கு பின்னர் மறு கூட்டல் அல்லது விடைத்தாள் நகல் பெற தேர்வுத்துறையின் இணையதளமான www.dge.tn.nic.in இல் தான் விண்ணப்பிக்கவேண்டும் என்று அறிவித்திருந்தது. விண்ணப்பிக்கும் முறையையும் அறிவித்திருந்தது.

ஆனால் அதை அறியாத மாணவர்கள் வழக்கம் போல மாவட்டங்களின் முதன்மை கல்லி அலுவலர் அலுவலகத்திலும், சென்னையில் டிபிஐ வளாகத்திலும் விண்ணப்ப படிவம் கொடுப்பார்கள் என்று கருதி நேற்று வந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.

அரசோ, அரசு துறையோ பொதுமக்களுக்கு அவசியமான ஒரு திட்டத்தின் வழி முறைகளை மாற்றும் போது, அது குறித்த செய்திகள் மக்களிடையே சரியாக சென்று சேர்வதில்லை என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது. அதே போல நடந்து முடிந்த +2 தேர்வின் மதிப்பெண்களை மறு கூட்டல் செய்வது மற்றும் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பங்கள் இதுவரை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திலும், சென்னையில் உள்ள கல்வி இயக்குநர் அலுவலகமான டிபிஐயிலும் வழங்கப்பட்டு வந்தது. 

தற்போது கல்வித்துறை அதன் செயல்பாடுகளை நவீனப்படுத்தும் செயலாக, விண்ணப்பங்களை இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறை கிராமப்புர மாணவர்களை பெரிதும் பாதித்துள்ளது. இது குறித்து கிராமப்புர மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்பதே உண்மை. எந்த முறையை மாற்றினாலும் சிறிது சிறிதாக நடைமுறைப்படுத்தினால் அனைவருக்கும் பயன் தரும் வகையில் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த கல்வித்துறையின் வழிமுறை மாற்றத்தால் கிராமப்புர மாணவர்கள் பாதிக்காதது போல அரசோ, கல்வித்துறையோ எதாவது நடவடிக்கை எடுக்க வெண்டும். +2 தேர்வு முடிவை அடுத்து அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய பள்ளிகளில் இணையதளம் மூலம் மாணவர்கள் பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியது. அதேபோல இந்த மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெறும் விண்ணப்பங்களையும் பள்ளிகளிலேயே மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்ய நடவடிக்கை எடுத்தால், அனைவரும் பயன்பெறுவர்.

ஒரு நாட்டின் வளர்ச்சியில் நவீனத்துவம் அவசியமான ஒன்று என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த நவீனத்துவத்தால் பொதுமக்கள் பாதிப்படைவதாக இருந்தால், அதை நன்கு பரிசீலித்து செயல்படுத்துவது அரசின் கடமைகளுல் ஒன்றாகும்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment