அரசு பள்ளிகளில் இனி ஆங்கில வழி கல்வி


அனைத்து அரசுப் பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டில், ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவங்கப்படும்" என பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார். கடந்த கல்வி
ஆண்டில், 320 பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்ட நிலையில், மீதம் உள்ள அனைத்து அரசு துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், வரும் கல்வி ஆண்டில், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்படும் என, பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன், நேற்று, சட்டசபையில் அறிவித்தார்.

கடந்த கல்வி ஆண்டு, 320 அரசு பள்ளிகளில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பில், தலா, இரண்டு ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டன. 640 பிரிவுகள் துவங்கப்பட்டு, அதில், 22 ஆயிரத்து, 400 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

வரும் கல்வி ஆண்டு முதல், தேவைப்படும் அனைத்து அரசு துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகள் துவங்கப்படும். இதனால், ஆண்டுக்கு, 1.5 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

அமைச்சர் அறிவிப்பின்படி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும், 1 மற்றும் 6ம் வகுப்புகளில், தலா இரு பிரிவுகள், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்படும். ஆங்கில வழி வகுப்புகள் கூடுதலாக துவங்கப்படும் போது, அதற்கென, ஆசிரியர்களும், கூடுதலாக நியமனம் செய்ய வேண்டும். ஆனால், கூடுதல் ஆசிரியர் நியமனம் குறித்து, அமைச்சர் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

வழக்கமாக, பள்ளிகளில் ஏற்படும் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மட்டுமே, அமைச்சர் வெளியிட்டார்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment