பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் ரிசர்வ் வங்கி


ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான கரன்சி நோட்டுகள் அழுக்காகி மாற்றப்படுவதால், பிளாஸ்டிக் கரன்சிகளை சோதனைக்காக புழக்கத்தில் விடும் பணிகளை
ரிசர்வ் வங்கி வேகப்படுத்தியுள்ளது. புழக்கத்தில் இருக்கும் கரன்சி நோட்டுகளில் 20 சதவீதம் சேதம் அடைதல், அழுக்காதல் போன்ற காரணங்களால் ஆண்டுதோறும் மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. 2012 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் 1300 கோடி கரன்சி நோட்டுகள் மாற்றப்பட்டன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சனைக்கு தீர்வாக பிளாஸ்டிக் அல்லது பாலிமர் கரன்சிகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் புழக்கத்துக்கு வந்தது. சிங்கப்பூர், கனடா, நியூசிலாந்து, மலேசியா, வியட்நாம், பிஜி, புரூணை, பப்புவா நியு கினியா, ருமேனியா ஆகிய நாடுகளிலும் பிளாஸ்டிக் கரன்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கிலாந்தும் பிளாஸ்டிக் கரன்சிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவில் முதலில் 100 கோடி ரூ.10 பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், புவனேஷ்வர், சிம்லா ஆகிய பகுதிகளில் அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் பேசும்போது, பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முயன்று வருகிறது. சோதனை முயற்சி வெற்றி பெற்றால் இது பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment