தமிழில் சிறந்த மென்பொருள் உருவாக்கினால் விருது


தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, கணினித் தமிழுக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குவோருக்கு, புதிய விருதுகள் வழங்கப்படும்," என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.


சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பு:

சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு, வள்ளுவர், திரு.வி.க., பாரதிதாசன், பாரதியார், கி.ஆ.பெ.விஸ்வநாதம், தமிழ்த்தாய், கபிலர், உவே.சா., கம்பர், சொல்லின் செல்வர் போன்ற விருதுகள் வழங்கப்படுகின்றன. திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, பிற நாட்டு அறிஞர்கள் அறியும் வகையில் செய்தவரும், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை மொழி பெயர்த்தவருமான, அயல் நாட்டு தமிழ் அறிஞர் ஜி.யு.போப் பெயரில், சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் விருது உருவாக்கப்படும்.

ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருது, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், தங்கப் பதக்கம், தகுதியுரைகளை கொண்டிருக்கும். இதேபோல், தமிழ்க் காப்பியங்களில் சிறந்த காப்பியமான, சீறாப் புராணத்தை இயற்றிய உமறுப் புலவர் பெயரிலும், புதிய விருது அளிக்கப்படும். தமிழ் இலக்கியத்துக்கு தொண்டாற்றி வரும் அறிஞருக்கு இவ்விருது ஆண்டுதோறும் அளிக்கப்படும். ஒரு லட்சம் ரூபாய்ரொக்கம், தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை இவ்விருது கொண்டிருக்கும்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, கணினித் தமிழுக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குவோருக்கு, "முதல்வர் கணினித் தமிழ் விருது" வழங்கப்படும். இவ்விருது, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை கொண்டிருக்கும்.

திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழக தமிழ்த் துறையில், போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை நிலவுகிறது. எனவே, இப் பல்கலைக்கு, மூன்று தமிழ் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்க, ஆண்டுக்கு, 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், தொல்காப்பியத்தின் பெயரில், ஆய்வு இருக்கை ஏற்படுத்தப்படும். இதற்கு, 50 லட்சம் ரூபாய், வைப்புத் தொகை வழங்கப்படும். இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment