இரண்டு நாடுகள் குறுக்கே அமைந்துள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சி

இயற்கை படைத்த அற்புதங்களில் விக்டோரியா நீர்வீழ்ச்சியும் ஒன்று. ஆப்பிரிக்கா கண்டத்தில், ஜிம்பாப்வே நாட்டுக்கும் ஜாம்பியா நாட்டுக்கும்
எல்லையாக இந்த அருவி அமைந்துள்ளது.

விக்டோரியா நீர்வீழ்ச்சியை முதன் முதலில் கண்டுபிடித்துச் சொன்னவர் இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து பகுதியைச் சேர்ந்த புகழ்பெற்ற சுற்றுலாப் பயணி டேவிட் லிவிங்ஸ்டோன் என்பவர். இவர் ஆப்பிரிக்கக் காட்டுப் பகுதியை சுற்றி வந்தபோது, 1855-ம் ஆண்டு,நவம்பர் 16-ம் நாள் இந்த நீர் வீழ்ச்சியைப் பார்த்தாராம். மிக உயரத்திலிருந்து விழும் இந்த நீர் வீழ்ச்சியைக் கண்டதும் ஆச்சரியப்பட்டு, இதைப் போல நான் எங்கும் கண்டதில்லை என்றாராம்.

இவர்தான் இந்த நீர்வீழ்ச்சிக்கு இங்கிலாந்தின் அரசியான விக்டோரியா மகாராணியின் பெயரைச் சூட்டியவர்.

ஆனால் ஆப்பிரிக்க மக்கள் இந்த நீர்வீழ்ச்சியை "மோஷி ஓயா துன்யா' என்றுதான் அழைக்கிறார்கள். இதற்கு "இடி முழக்க புகை மண்டல அருவி' என்று பொருள். அவர்கள் இந்தப் பெயரைச் சூட்டியதற்கும் ஒரு காரணம் உண்டு. இந்த அருவி ஏற்படுத்தும் இடிமுழக்கம் போன்ற ஒலியும் நீர் விழுவதால் ஏற்படும் புகைமண்டலத் துளிகளும் இந்தப் பெயர் சரிதான் என்கின்றன.

இதன் அகலம் 1708 மீட்டர். உயரம் 108 மீட்டர். இதுதான் உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியாகக் கருதப்படுகின்றது.

இந்த நீர்வீழ்ச்சிக்குக் காரணமான "ஜாம்பஸி' நதி 1000 மைல் தொலைவிற்குத் தடையின்றி ஓடி வருகிறது. இப்படி ஓடிவந்து அதலபாதாளத்தை நோக்கி விழும் போதுதான் இதுபோன்ற இடிமுழக்கம் போலக் கேட்கும் ஓசை ஏறப்டுகிறது. இது கீழே வீழ்ச்சியடையும்போது எழும் சாரலும் நீர்த்திவலைகளும் புகை போல எழும்பும். இது 40 மைல் தொலைவுக்கு அப்பாலும் நன்றாகத் தெரியும்.

இப்படிச் சிதறி விழும் நீர்த்திவலைகளில் சூரிய ஒளி படுவதால் இப்பகுதியில் எப்போதும் வானவில்லைக் காணலாம். சில சமயங்களில் இரண்டு வானவில்கள் தோன்றி வர்ணஜாலம் புரிந்து கண்ணைக் கவரும். பௌர்ணமி இரவில்கூட இங்கு வானவில் தோன்றி அதிசயம் புரியும்.

"ஜாம்பஸி' நதி, விக்டோரியா நீர்வீழ்ச்சியாக விழுந்து மீண்டும் அடர்ந்த காடுகளின் வழியே மிகப் பெரிய நதியாகப் பாய்ந்து ஓடுகிறது.

இந்த அருவியைக் காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து போகின்றனர். இதனால் ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியா நாடுகளுக்கு ஏகப்பட்ட வருமானம்!

இந்த அருவியை ஒட்டி ஜாம்பியா நாட்டுக்கும் ஜிம்பாப்வே நாட்டுக்கும் எல்லைப் பகுதியில் நதியின் மீது மிக நீண்ட அழகிய பாலம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தின் வழியே செல்லும்போது, இந்த நீர்வீழ்ச்சியின் முழு அழகையும் கண்டு அதிசயக்கலாம். முடிந்தால் ஒரு நடை நீங்களும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment